கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்ததால் முல்லைப் பெரியார் அணைக்கு வரும் நீர் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தேனி முல்லை பெரியார் அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. பருவ மழை தீவிரம் அடைந்ததால் அணைக்கு 945 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் ஆயிரத்து 247 மில்லியன் கன அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் தற்போது ஆயிரத்து 312 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி 300 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தென்மேற்குப் பருவ மழை நீடிக்கும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர வாய்ப்புள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.