மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 11 ஆயிரம் 302 கன அடியாக குறைந்துள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 117 புள்ளி 20 அடியாக நீடித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள, கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து, வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி உபரிநீர், வெளியேற்றப்பட்டு வருகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக, ஒகேனக்கல் வரும் காவிரி நீரின் வரத்து, வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியிலிருந்து 11ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
தொடர் நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் 26வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், நிபந்தனைகளுடன் பரிசல்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பரிசல்கள் இயக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 11 வது நாளாக 117 புள்ளி 20 அடியாக நீடித்து வருகிறது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11 ஆயிரம் 302 கனஅடியாக குறைந்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 18ஆயிரம் கன அடி தண்ணீரும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 800 கன அடியாகவும் உள்ளது.