மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது

கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது. விரைவில் ஒரு லட்சம் கனஅடிக்கும் அதிகமான தண்ணீர் வர உள்ளதால் ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் காவிரி
வழித்தடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தநிலையில் மேட்டூர் அணை பகுதிகளான மூலக்காடு, பன்னவாடி, கோட்டையூர், காவேரிபுரம், கோவிந்தப்பாடி, கருங்கல்லூர், செட்டியூர், சின்ன மேட்டூர், கோனூர் மேற்கு, கூனான்டியூர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள்
உள்ளிட்டோர் மேடான பகுதிக்கு சென்று பாதுகாப்பாக இருக்கும்படியும், தங்களது கால்நடைகள் மற்றும் உடைமைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு சேலம் மாவட்ட ஆட்சியர்
ராமன் அறிக்கையின் வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளார்.

இப்பகுதிகளில் வருவாய்த்துறை மற்றும் மீன்வளத்துறையினரால் தண்டோரா மூலமும், ஒலிப்பெருக்கி மூலமும், தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்கள் வாயிலாகவும், நேரிடையாகவும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கைகள் செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள மாவட்ட ஆட்சியர் ராமன், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் வருவாய் துறை, பொதுப்பணித்துறை, காவல்
துறை, மீன் வளத்துறை, தீயணைப்பு மீட்புப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்களும், காவல் துறையின் பயிற்சி பெற்ற பேரிடர் மேலாண்மை மீட்பு குழுக்களும் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அணை பகுதிகளில் இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலாப்
பயணிகள் உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்பற்ற முறையில் நீரில் இறங்கி குளிப்பதையோ, நீச்சல் அடிப்பதையோ, மீனவர்கள் மீன் பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைப்படங்களோ, செல்பி எடுப்பதையோ முற்றிலும் தவிர்த்திட
வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும், வெள்ளம் தொடர்பான உதவிக்கு கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணான 1077ஐ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version