கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் நிறுத்தப்பட்டதால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீர்வரத்து 900 கன அடியாக குறைந்துள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டதால், பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கும் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. தொடர்ந்து 2வதுநாளாக நீர்வரத்து 900 கன அடியாக நீடித்து வருகிறது. நீர்வரத்து குறைவால், ஐந்தருவி, சினிபால்ஸ், பரிசல் பகுதிகளில் ஆங்காங்கே நீர் தேக்கம் அடைந்து, பாறைகள் காட்சியளிக்கின்றன.
தற்போது ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறைந்துள்ள போதிலும், அருவியில் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி, தொடர்ந்து 170வது நாளாக அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, வினாடிக்கு 421 கன அடியாக குறைந்துள்ளது. காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 107.90 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 75.458 டி.எம்.சி யாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.