போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதால், ஈரான், ஈராக் நாடுகளுக்கு இந்தியர்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என இந்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
ஈரானின் முக்கியத் தளபதி காசிம் சுலைமானி, அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதலில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக, நேற்று ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அதை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது. இந்நிலையில் எந்த நேரத்திலும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் கடுமையான போர் தொடங்கலாம் என்ற பதட்டம் நிலவுகிறது. இந்நிலையில் இன்று இந்திய அரசு வெளியிட்டுள்ள முக்கியமான அறிவிப்பில், ஈரான், ஈராக் நாடுகளில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் இந்தியாவில் இருந்து புதிதாக யாரும் ஈரான் மற்றும் ஈராக் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என்று இந்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதுபோல், இந்திய விமானங்கள் ஈரான், ஈராக் வான்வெளியில் பறக்க வேண்டாம் என்றும் எச்சரித்துள்ள இந்திய அரசு, தற்போது ஈரான், ஈராக் நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு, பாக்தாத், எர்பில் பகுதிகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் தேவையான உதவிகளைச் செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளது.