தொடர் கனமழையால், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்,
ஏ.டி.காலனி பகுதியில் உள்ள குடியிருப்பின் 10 அடி சுற்றுச் சுவர் இடிந்து, அருகில் இருந்த மற்ற நான்கு வீடுகள் மீது விழுந்தது. இந்த விபத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டார். மேலும், இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்ச ரூபாய் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, இன்று மேட்டுப்பாளையத்துக்குச் செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.