சென்னையில் வாக்காளர்கள் இன்று முதல் புதிய செயலியை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தங்கள் விவரங்களில் திருத்தங்களை அவர்களே மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர்கள், இன்று முதல் செப்டம்பர் 30 வரை ஒரு மாத காலத்திற்கு வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் விவரங்களில் திருத்தங்களை அவர்களே சிறப்பு செயலி மூலம் மேற்கொள்ளும் திட்டம் செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், பிறந்த தேதி, முகவரி, புகைப்படம் மற்றும் பாலினம் உள்ளிட்ட விவரங்களில் திருத்தங்களை வாக்காளர்களே மேற்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக NVSP எனும் தேசிய வாக்காளர் சேவை வலைத்தளம், வாக்காளர் உதவி கைப்பேசி செயலி மூலம், வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் புகைப்பட அடையாள எண்ணை உள்ளீடு செய்து, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில், ஒன்றை கொண்டு திருத்த விவரங்களை பதிவேற்றம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.