பெங்களூரு பயணிக்கும் பிரமாண்ட விஷ்ணு சிலைக்கு தேசிய நெடுஞ்சாலையில் செல்ல அனுமதி கிடைக்காததால் செஞ்சி அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து பெங்களூருவுக்கு பிரமாண்ட விஷ்ணு சிலை சாலை வழியாக கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் சிலையை கொண்டு செல்வதில் ஏராளமான தடங்கல்கள் ஏற்பட்டன. குறிப்பாக குறுகிய சாலை வழியாக செல்லும் போது கட்டிடங்களில் உரசி சேதங்கள் ஏற்பட்டன. இதனால் கட்டிட உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்ட பின்னரே மீண்டும் எடுத்துச்செல்ல முடிந்தது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக செஞ்சி அடுத்த தீவனூர்-கூட்டேரிப்பட்டு சாலையில் சிலையானது ராட்சத லாரியுடன் நிறுத்தப்பட்டுள்ளது.
செஞ்சி,திருவண்ணாமலை வழியாக பெங்களூர் செல்ல உள்ள இச்சிலை , புதுச்சேரி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை செல்வதற்கான அனுமதி பெறாததால் இச்சிலை தீவனூரில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த பிரமாண்டமான மகாவிஷ்ணு சிலையை பார்ப்பதற்காக பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.