உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு தடுப்பூசி கண்டறிய பல்வேறு நாடுகளின் மருத்துவ ஆராய்ச்சி குழுவினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில், அதிக வெப்பமுள்ள பகுதிகள் மற்றும் உடலின் வெப்பம் அதிகரிப்பதால் கொரோனா வைரஸ் இறந்து போகும் என சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மனித உடலின் வெப்பம் அல்லது குளிர்ச்சியை அதிகரிப்பதன் மூலம், கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற கருத்து உண்மையானது இல்லை என உலக சுகாதார நிறுவன நிபுணர் டாக்டர் மைக்கேல் ரெயான் தெரிவித்துள்ளார். பொதுவாக வைரஸ் தொற்று ஏற்பட்டால், காய்ச்சல் ஏற்பட்டு உடலின் வெப்பம் அதிகரிப்பது இயல்பு எனவும், அதனால் எந்த மாற்றங்கள் ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.