விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே, திமுக அமைச்சர்களின் வெற்று அறிவிப்பை நம்பி, பேருந்திற்காக மணிக்கணக்கில் காத்திருந்த கிராம மக்கள், வழக்கம்போல் மனவேதனையுடன் நடை பயணமாக சென்றனர்.
உளுத்திமடை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான உச்சனேந்தல், வாகைக்குளம், புளியங்குளம் உள்ளிட்ட கிராமங்களில், பேருந்து வசதி இல்லாததால், அப்பகுதி மக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் பள்ளி மாணவ-மாணவிகள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் காட்டுப்பகுதி வழியாக நடந்து பள்ளிக்கூடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், உளுத்திமடை வழியாக திருப்புவனத்திற்கு புதிய பேருந்து இயக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவித்திருந்தனர். இவர்களின் பேச்சை நம்பி, அவர்கள் கூறிய தினத்தில், கிராம மக்கள் பேருந்திற்காக காத்திருந்துள்ளனர். பல மணி நேரம் காத்திருந்தும் பேருந்து வராததால், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், திருப்புவனம் போக்குவரத்து பணிமனை போன் செய்து கேட்டுள்ளனர். அப்போது தங்கள் கிராம வழித்தடத்திற்கு பேருந்து சேவை இல்லை என கூறியுள்ளனர். அதை கேட்டு, அமைச்சர்களின் வெற்று அறிவிப்பை நம்பிய கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.