வேலைக்காக சொந்த ஊரை விட்டு விட்டு வெளியூர் செல்வது என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கிராமமே பிழைப்பு தேடி ஊரைக் காலி செய்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ளது உத்தன் என்கிற கிராமம். கடந்த 1982 ஆம் ஆண்டில் இங்கு 170க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தன. விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட இக்கிராமத்தினர், போதிய மழைப் பொழிவு இல்லாததாலும் வறட்சியினாலும் கிராமத்தை விட்டு நகரத்தை நோக்கி இடம்பெயரத் துவங்கினர். இதனால் இக்கிராமமே வெறிச்சோடிக் காணப்படுகிறது.
கிராமத்தின் முகப்பு வாயிலில் மந்தை மாரியம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் ஸ்ரீ மந்தை மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவுக்கு மட்டும் இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர்.
நியூஸ் ஜெ தொலைக்காட்சி நிருபர் சென்றபோது வெறும்10 நபர்கள் மட்டுமே கிராமத்தில் இருந்தனர். தங்கள் கிராமத்தின் இந்த நிலைக்கு காரணம் வறட்சியும் வறுமையும் தான் எனக் கூறிய அவர்கள் தமிழக அரசு கொடுக்கும் இலவச அரிசி, முதியோர் உதவித் தொகை தான் தங்களைக் காப்பாற்றி வருவதாகக் கூறினர்.
மேலும் தமிழக அரசு தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
கிராமங்களிலிருந்து மக்கள் பிழைப்பிற்காக நகரங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்வது இப்போது மட்டுமல்ல காலங்காலமாய் நடந்து வருகிறது.ஆனால் தற்போது விவசாயத்தின் மீது நம்பிக்கை இழந்து வசதியான வாழ்வு வாழ்வதற்காக நகரங்களை நோக்கி மக்கள் இடம்பெயருகின்றனர். மேலும் விவசாயிகள் உணவு தானியங்களை உற்பத்தி செய்வது முதல் விற்பனை செய்வது வரை பல்வேறு விதமான இடர்பாடுகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. இதுபோன்ற சூழலும் நகரத்தை நோக்கி இடம்பெயர தூண்டுகிறது.