தமிழகத்தின் மற்ற கிராமங்களுக்கு முன்மாதிரியாக உள்ள கிராமம்

வரதட்சணையால் ஆங்காங்கே ஒரு சில குடும்பங்கள் இன்னும் மறைமுகமான அழுத்தத்தை சந்தித்து வரும் நிலையில், சிவகங்கை அருகே ஒரு கிராமத்தில், மது அருந்தினாலோ, வரதட்சிணை வாங்கினாலோ தண்டனை கொடுக்கப்படுவது, தமிழகத்தின் மற்ற கிராமங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது.

சிவகங்கை அருகே உள்ளது ஆலவிளாம்பட்டி கிராமம். இக்கிராமத்தில் வேடுவர் இனத்தைச் சேர்ந்த 350 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களது முன்னோர் பல நூறு ஆண்டுகளுக்கு முன் திருச்சி கொள்ளிடம் பகுதியில் இருந்து இப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர். அப்போது அங்குள்ள ராமசுவாமி, பொன்னழகி அம்மாள் தெய்வங்களிடம் மது அருந்த மாட்டோம் என வாக்குறுதி அளித்துள்ளனர். அதை இன்றளவும் பின்பற்றுகின்றனர்.
இக்கிராம ஆண்கள் வரதட்சணை வாங்குவதில்லை. அதேபோல் பெண்களுக்கும் வரதட்சணை கொடுப்பதில்லை. இதை கல்வெட்டில் எழுதி ஊர் நுழைவாயிலில் வைத்துள்ளனர். மேலும் மது குடித்தாலோ, வரதட்சணை வாங்கினாலோ தண்டனை வழங்கப்படும் என எச்சரித்துள்ளனர். குற்றங்களைத் தடுக்க ஊர் முழுவதும் கேமராக்களை இளைஞர்கள் சொந்த செலவில் பொருத்தியுள்ளனர். எனவே இந்த ஊர் மக்கள் காவல் நிலையம் சென்றதே இல்லை.

Exit mobile version