ஆ.ராசா அளித்த பேட்டியில், 2 ஜி மேல்முறையீடு வழக்கின் தீர்ப்பு குறித்த பயமும், விரக்தியும்தான் தெளிவாக தெரிகிறது என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மறைந்த மூதறிஞர் ராஜாஜியின் 142-வது பிறந்தநாளையொட்டி, சென்னை பிராட்வேயில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. ராஜாஜியின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு, அமைச்சர்கள் ஜெயக்குமார், பென்ஜமின், பாண்டியராஜன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், 2ஜி அலைவரிசை முறைகேடு மேல்முறையீடு வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக கூறினார். வழக்கின் தீர்ப்பு, ஆ.ராசாவின் தலைக்கு மேல் உள்ள கத்திக்கு சமம் எனவும், அதனால் ஏற்பட்ட பயமும், விரக்தியும்தான், அவரது பேச்சில் தெரிவதாகவும் விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், திமுகவின் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நில அபகரிப்பு, அராஜகம், அத்துமீறல், ஊழல் உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறினார். அதிமுக அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் மீது எந்தவித வழக்குகளும் இல்லை எனவும், திமுகவின் ஓட்டு வங்கி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.