தொடங்கியது வரதராஜப் பெருமாள் கோயிலில் அத்திவரதர் தரிசனம்

காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசன வைபவம் இன்று கோலாகலமாக தொடங்கியது.

இதற்காக அனந்தசரஸ் குளத்தில் இருந்து நீரை வெளியேற்றி, 1979ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை அத்திவரதர் வெளியே கொண்டு வரப்பட்டார். பின்னர் வசந்த மண்டபத்தில் அத்திவரதருக்கு தைலக்காப்பு சடங்கு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று காலை 6 மணி அளவில் சயன கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு தரிசனம் தந்தார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல் முதலில் அத்திவரதரை தரிசனம் செய்தார். அவரைத் தொடர்ந்து தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். “கோவிந்தா, நாராயணா” என்று பக்தி பரவசத்துடன் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். இன்று முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை 48 நாட்களுக்கு அத்திவரதர் காட்சி அளிப்பார். ஒருவரது ஆயுள்காலத்தில் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே அத்திவரதரை தரிசிக்க முடியும் என்பதால், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளொன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க வருவார்கள் என்பதால் அவர்களின் வசதிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்துள்ளது. காஞ்சிபுரம் மக்கள் 26 நாட்களுக்கு அத்திவரதரை தரிசனம் செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version