மூல வைகை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டி வரும் கனமழையால், வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. தண்ணீரை விவசாயிகள் மலர் தூவி, வரவேற்றனர்.
தேனி மாவட்டம் வருஷநாடு பகுதிகளில் மூல வைகை ஆற்றில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார். வருஷநாடு காமராஜபுரம், பொம்ம ராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு, பொதுப்பணித் துறையினர் மற்றும் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலமாக கூறி வருகின்றனர். இந்தநிலையில் வைகையில் நீர் பொங்கி வருவதை விவசாயிகள் பூஜைகள் செய்தும் மலர் தூவியும் வரவேற்றனர். இந்த ஆண்டு நெல், மக்காசோளம் போன்றவை பயிரிட்டு அதிக லாபம் அடைவோம் என்றும் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தனர்.