அதிநவீன எல்.ஹெச்.பி பெட்டிகள் இணைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் விளங்கும் மதுரையின் பாரம்பரிய அடையாளமான வைகை அதிவிரைவு ரயில் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்
வைகை அதிவிரைவு ரயில் 1977 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி முதல் மதுரையிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து மதுரைக்கும் இயக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் காலை 7 மணிக்கு புறப்படும் வைகை ரயிலானது மதியம் 1.15 மணிக்கு சென்னையை அடைகிறது. மதுரை மண்டலத்தில் இயக்கப்பட்ட முதல் அதிவிரைவு ரயில் வைகையே. வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில், ஏறக்குறைய ஆயிரம் பேர் பயணிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த ரயிலின் பழைய பெட்டிகளை மாற்றி அதிநவீன வசதி கொண்ட எல்.ஹெச்.பி பெட்டிகளை தென்னக ரயில்வே இணைத்துள்ளது. இந்த புதிய ரயில் பெட்டிகள் தங்களுக்கு மிகவும் வசதியாக இருப்பதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
பழைய இருக்கைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டு தனித்தனி இருக்கைகள், புஷ் பேக் வசதி, மின்விசிறி, தண்ணீர் பாட்டில்கள் வைப்பதற்கான இடம் மற்றும் தீ தடுப்பு இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
புதிதாக இணைக்கப்பட்டுள்ள 22 பெட்டிகளில் 3 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 3 குளிர்சாதன இருக்கை வசதி பெட்டிகள், 13 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகளும், ஒரு சமையல் வசதி பெட்டியும், 2 காப்பாளர் மற்றும் மின்சார இயந்திர பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது.
கடந்த 42 வருடங்களாக மதுரையிலிருந்து சென்னைக்கும் மறுமார்க்கமாக சென்னையிலிருந்து மதுரைக்கும் வெற்றிகரமாக இயங்கி வருகிறது வைகைநதியின் பெயரைத் தாங்கி செல்லக் கூடிய வைகை அதிவிரைவு ரயில். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு புதிய பெட்டிகள் இணைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் திகழும் வைகை எக்ஸ்பிரஸ் பயணிகளிடம் அதீத வரவேற்பை பெற்றுள்ளது.