இங்கிலாந்தில் தஞ்சமடைந்திருக்கும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இந்திய பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்தில் தஞ்சமடைந்த தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியா அழைத்துவர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கு வலுசேர்க்கும் விதமாக விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்தின் வெஸ்ட் மினிஸ்டர்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து விஜய் மல்லையாவை இந்தியா அழைத்துவரும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாடு கடத்தப்படுவதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய மல்லையாவுக்கு 14 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்ட வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக விஜய் மல்லையா அறிவித்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடனேயே மேல்முறையீடு செய்ய திட்டமிட்டதாகவும், பிரிட்டன் உள்துறையின் அனுமதிக்கு முன்பாக அதனை தொடங்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள அவர், தற்போது, மேல்முறையீட்டுக்கான பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.