நாடாளுமன்றத்தில் மேகேதாட்டு விவகாரம், ரபேல் ஊழல் விவகாரம் உள்ளிட்டவற்றை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால், இரு அவைகளும் இன்றும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், முதல்நாள் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.2-ம் நாளான நேற்று மக்களவையில் மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, அஇஅதிமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து அஇஅதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை 12 மணி வரையும், பின்னர் நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில் 3-ம் நாளான இன்று ரபேல் ஊழல் விவகாரம் பற்றி ஆலோசிக்க மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் சுனில் குமார் ஜக்கரும், பணமதிப்பிழப்பு, ரிசர்வ் வங்கியில் மத்திய அரசின் தலையீடு ஆகியவை குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் உறுப்பினர் ரஞ்ஜித் ரஞ்சன் ஆகியோரும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இதனால் இன்றும் இரு அவைகளும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.