முல்லைப் பெரியாறு அணையில் மூவர் கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய அரசின் மூவர் கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு செய்கின்றனர்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அணையை கண்காணித்து பராமரிக்க மூவர் குழுவை நியமித்தது. ஆண்டிற்கு ஒருமுறை அணையை ஆய்வு செய்து அதன் உறுதித்தன்மை, தேவைப்படும் வசதிகளை செய்து தருவது தொடர்பான பணியை இக்குழு மேற்கொள்ளும்.

தற்போது இக்குழுவின் தலைவராக அணை பாதுகாப்பு அமைப்பின் முதன்மை பொறியாளர் குல்ஷன் ராஜ் உள்ளார். தமிழகப் பிரதிநிதியாக, தமிழக அரசின் பொதுப்பணித்துறை செயலர் மணிவாசன், கேரள பிரதிநிதியாக கேரள கூடுதல் தலைமை செயலர் விஷ்வாஸ் மேஹ்தா ஆகியோர் உள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் 4-ம் தேதி இக்குழு பெரியாறு அணையை ஆய்வு செய்தது.

தற்போது அணையின் நீர்மட்டம் 118.50 அடியாக குறைந்துள்ள நிலையில், அணைப்பகுதியில் செய்ய வேண்டிய மராமத்துப் பணிகள், மதகுகளின் இயக்கம், கேலரிப்பகுதியில் கசிவுநீர் ஆகியவை குறித்தும் கண்காணிப்புகுழு இன்று ஆய்வு செய்யவுள்ளது. துணைக் கண்காணிப்புக்குழு அவ்வப்போது ஆய்வு செய்து வரும் நிலையில் மூவர் கண்காணிப்புக் குழுவின் இந்த ஆய்வு முக்கியமானதாக கருதப்படுகிறது.

Exit mobile version