மரத்தில் ஆணி அடித்து விளம்பரப் பதாகைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் 10 நாட்களில் அகற்ற வேண்டும்: சென்னை மாநகராட்சி

சென்னையில் பசுமையை பாதுகாக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக, மரங்களில் விளம்பரதட்டிகள், கம்பிகள் போன்ற தேவையற்ற பொருட்களை அமைப்பவர்களுக்கு கடுமையான தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

சென்னையை பசுமையாக்க மாநகராட்சி சார்பில் மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. சில தனியார் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மரங்களில் ஆணி அடித்து விளம்பரப் பதாகைகளை வைத்து மரங்களை சேதப்படுத்தி வருகின்றனர். பெயின்ட் அடித்தல், மின்சார அலங்கார விளக்குகள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகளினால் மரங்கள் பட்டுபோவதுடன், அதனுடைய வாழ்நாள் குறைந்து போகிறது.

இதை தடுப்பதற்காகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன்படி மரங்களை அமைக்கப்பட்டுள்ள தேவையற்ற விளம்பர பலகைகள், மின்சார அலங்கார விளக்குகள், கேபிள் ஒயர்கள் மற்றும் இதர பொருட்களை 10 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் அகற்ற வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

தவறும் பட்சத்தில் சம்மந்தப்பட்டவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மரத்தில் ஆணி அடிப்பவர்கள் குறித்து புகார்களை 1913 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Exit mobile version