பெற்றோரின் பணத்தை தண்ணீர் போல் செலவழித்த சோகம்!

பப்ஜி விளையாடி 16 லட்சம் ரூபாயை இழந்த மகனுக்கு பாடம் புகட்டும் விதமாக அவரது தந்தை மெக்கானிக் ஷாப்பில் வேலைக்கு சேர்த்துவிட்ட சம்பவம் பஞ்சாபில் நடந்துள்ளது. அதுகுறித்த செய்தித்தொகுப்பை இப்போது பார்க்கலாம்.

 ” ஓடி விளையாடு பாப்பா.. நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா” என்ற பாரதியின் வரிகளுக்கு செவிசாய்த்தது அந்தக்காலம். உட்கார்ந்த இடத்திலேயே பேட்டில் ராயலில் சுட்டுத்தள்ளுவோம் வாங்கப்பா என்று விளையாடுவது இப்போதிருக்கும் பப்ஜி காலம்.

ஒரேயொரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் பப்ஜியை இன்ஸ்டால் செய்துவிட்டு இரவு பகல் என பொழுதுக்கும் விளையாடலாம் என்று விளையாடி தீர்க்கின்றனர். பப்ஜியில் அதிகம் மூழ்கியிருப்பது இன்றைய டீன் ஏஜ் பருவத்தினர்தான். அந்த வகையில் பஞ்சாப்பை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன், பப்ஜியில் மூழ்கியுள்ளான். கேம் காஸ்மெடிக்ஸ், ஆர்ட்டில்லெரி, டோரன்மெண்டுக்கான பாஸுக்கு பணம் செலுத்துதல் என பல வகைகளில் தன் பெற்றோரின் வங்கிக் கணக்கிலிருந்து செலுத்தியுள்ளான்.

தன் தாயின் ஸ்மார்ட்போனில் பப்ஜி விளையாடிய அந்த சிறுவனுக்கு வங்கிக் கணக்கு, ரகசிய எண் உள்ளிட்டவை அந்த போனில் இருந்ததால் பரிவர்த்தனைகளுக்கு எளிதாக இருந்துள்ளது. மற்றொரு வங்கிக்கணக்கின் விவரங்களும் அந்த போனில் இருந்ததால், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு பரிவர்த்தனை செய்து கணக்கில் பணம் இருப்பு வைத்துக்கொண்டதோடு, பரிவர்த்தனை தொடர்பாக வரும் குறுந்தகவல்களையும் அவ்வப்போது டெலிட் செய்து பெற்றோரை ஏமாற்றியுள்ளான்.

எப்போதும் போனிலேயே ஏன் நேரத்தை கழிக்கிறாய் என கேட்டதற்கு பள்ளியில் ஆன்லைன் வகுப்பு எடுக்கிறார்கள் என்று சொன்னதும் பெற்றோரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இப்படியாக அச்சிறுவனின் தந்தையின் மருத்துவச்செலவுக்காக சேமித்து வைத்திருந்த பணம், தாயின் PF தொகை மற்றும் சேமிப்பு என 16 லட்ச ரூபாயையும் அவன் பப்ஜி விளையாடி தீர்த்துள்ளான்.

சில மாதங்களுக்குப் பிறகு மகனின் திருட்டுத்தனத்தைக் கண்டுபிடித்த தந்தை, பணம் சம்பாதிப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை மகனுக்கு உணர்த்தும்விதமாக அவனை மெக்கானிக் ஷாப்பில் வேலைக்கு அனுப்பியுள்ளார். மகனின் விளையாட்டுத்தனமான பப்ஜி மோகத்தால் 16 லட்ச ரூபாயை இழந்துள்ளனர் அந்த பெற்றோர். ஸ்மார்ட்போனை சிறுவர்களிடம் கொடுப்பதற்கு முன் அதில் வங்கிக் கணக்கு போன்ற விவரங்களை நீக்கி விட்டுக் கொடுப்பது மட்டுமல்லாமல் அவர்கள் அதிக நேரத்தை ஸ்மார்ட் போனிலேயே செலவழித்தால் என்னதான் செய்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும். அப்படி கவனித்தால் மட்டுமே இதுபோன்ற இழப்புகளிலிருந்து காத்துக்கொள்ள முடியும்.

Exit mobile version