காதலிக்காக ஒரு நினைவுப் பரிசை உருவாக்க முயன்றபோது, கை கட்டைவிரலை இழந்த இளைஞருக்கு, காலின் விரலைக் கையில் பொருத்தி தீர்வு தந்துள்ளனர் அமெரிக்க மருத்துவர்கள்.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள கார்சன் நகரத்தைச் சேர்ந்தவர் ஐடன்அட்கின்ஸ் என்ற இளைஞர். இவர் கடந்த ஏப்ரல் மாதத்தில் தனது காதலிக்கு தனது கைகளாலேயே ஒரு மரப் பொம்மையை செய்து தர முயற்சி செய்தார். அந்த முயற்சியின் போது மரத்தோடு சேர்ந்து அவரது கை கட்டைவிரலும் துண்டானது.
உடனே அவரது பெற்றோர் அட்கின்ஸை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அடுத்த 4 மணி நேரத்திற்குள் அட்கின்ஸ் இழந்த விரலை மீட்டு கொண்டு வந்தால் அதனைப் பொருத்தலாம் என்ற நிலையில், அவர்களால் அந்த விரலைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் சில மாதங்களாக கை கட்டைவிரல் இல்லாமல் அட்கின்ஸ் வாழ்ந்து வந்தார். அப்போது அவர் முன்பு போல அனைத்து வேலைகளையும் செய்ய இயலாததால், கடும் மன அழுத்தத்திற்கு ஆளானார்.
இந்நிலையில் அட்கின்ஸ் மருத்துவர்களிடம் மாற்று வழியைக் கேட்டபோது, காலில் உள்ள விரலில் ஒன்றை எடுத்து கையின் கட்டைவிரலுக்கு மாற்றாக வைக்கலாம் என மருத்துவர்கள் ஆலோசனை கூறினர். இதன்படி, கடந்த ஆகஸ்டில், அட்கின்ஸின் காலில் ஒரு விரல் அகற்றப்பட்டு கை கட்டைவிரலுக்கு மாற்றாகப் பொருத்தப்பட்டது. அந்த விரல் தற்போது இயல்பாக இயங்கி வருகிறது.
காதலுக்காக ஒரு பரிசை உருவாக்க முயன்று, தனது கை கட்டைவிரலை இழந்த இளைஞருக்கு ஒரு ஆச்சர்ய அறுவை சிகிச்சை, மீண்டும் கை கட்டைவிரலைத் தந்துள்ள செய்தியை ஊடகங்கள், மற்றும் சமூக வலைத்தளங்களில் மக்கள் ஆச்சர்யத்தோடு பார்த்து வருகின்றனர்.