நிவாரணத் தொகை வாங்குவதற்கான டோக்கன் வீட்டிற்கே வந்து தரப்படும்!

முதலமைச்சர் அறிவித்த நிவாரணத் தொகை ஆயிரம் ரூபாய் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கான டோக்கனை, அதிகாரிகள் வீட்டிற்கே வந்து வழங்குவார்கள் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு சார்பாக, அனைத்து அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் நிவாரணமாக ஆயிரம் ரூபாய் பணமும், அத்தியாவசிய பொருட்களும் இன்று முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், நியாய விலைக் கடைகளில் மக்கள் சிரமமின்றி நிவாரணத் தொகை பெறும் வகையில் டோக்கன் முறை கடைபிடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நிவாரண பொருட்களுக்கான டோக்கனை வீட்டிற்கே வந்து அதிகாரிகள் வழங்குவார்கள் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மேலும் சுழற்சி முறையில் மக்களுக்கு நிவாரணத் தொகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என்று கூறிய அவர், தினசரி காலை, மாலை என 100 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version