பாஜக தேர்தல் குழுவின் மூன்று நாள் கூட்டம் டெல்லியில் துவக்கம்

மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக மத்தியில் ஆளும் பாஜகவின் தேர்தல் குழுவின் மூன்று நாள் கூட்டம் டெல்லியில் இன்று துவங்குகிறது.

நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதையொட்டி தேசிய அளவில் காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் பாஜகவின் மத்திய தேர்தல் குழுக்கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. தொடர்ந்து 18 மற்றும் 22ம் தேதியும் கூட்டம் நடைபெறவுள்ளது. குழுவில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த மூன்று நாள் கூட்டத்திற்கு பிறகே பாஜக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் தற்போதுள்ள எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போதுள்ள எம்.பி.க்களில் 40 சதவிகிதம் பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version