திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த திரெளபதி அம்மன் கோவிலின் தீமிதி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதைத் தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. நேற்று மாலை கோவில் வளாகத்தில் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான அக்னி குண்டம் இறங்குதல் வெகு விமரிசையாக நடைபெற்றது. நந்தி நதியில் புனித நீராடி, கரகத்தை தலையில் சுமந்த படி வந்த பக்தர்கள் முதலில் அக்னி குண்டத்தில் இறங்கினர். இதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீ மிதித்தனர். காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
இந்நிலையில் தீ மிதிக்க முயன்ற பக்தர் ஒருவர், கால் தவறி குண்டத்தில் விழுந்தார். தீயணைப்புத்துறையினர் அவரை உடனடியாக மீட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.