விருத்தாசலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து, நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்காமல் சென்ற திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் சாந்தி. பரவளூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சாந்தியின் மகன் மதிய உணவு சாப்பிட வீட்டிற்கு சென்ற போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோ, லாக்கர் திறந்தும், துணிகள், பொருட்கள் அனைத்தும் சிதறி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் இருந்த பீரோ மற்றும் லாக்கரில் சாவி போட்டு திறந்திருப்பது தெரியவந்தது. 11 ஆயிரம் ரூபாய் மற்றும் நகைகள் கொள்ளையடிக்காமல் விட்டுச் சென்றதும் தெரியவந்தது. தடவியல் நிபுணர்கள் கைரேகைகளை ஆய்வு செய்து, தடயங்களை சேகரித்தனர். பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து, நகைகள், பணத்தை கொள்ளையடிக்காமல் சென்றது ஏன், அறிமுகமானவர்களே இச்செயலில் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க வீட்டில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்துமாறு போலீசார் அறிவுறுத்தினர்.