ஓடும் ரயிலில் திருடி மலேசியாவில் ஹோட்டல் வாங்கிய பலே திருடன்

ஓடும் ரயிலில் திருடி, மலேசியாவில் ஹோட்டல் வாங்கிய பலே கொள்ளையனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

7 மொழிகளில் சரளமாக பேசும் திறமை… இதுவரை 11 நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்…. அதுமட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளில் தொழில் முதலீடு செய்துள்ள இவரை தொழிலதிபர் என்று நினைக்கலாம். ஆனால் இவர் மீது 29 திருட்டு வழக்குகள் உள்ளதாக கூறுகிறார்கள் ரயில்வே போலீசார். திருச்சூரை சேர்ந்த இவரது பெயர் சாகுல் ஹமீது. எப்பொதும் விமானங்களில் பயணம் மேற்கொள்ளும் சாகுல் ஹமீது, திருடுவதற்காக மட்டும் ரயிலில் பயணம் செய்யும் வினோத கொள்ளையன் என்கிறார், ரயில்வே டிஐஜி பாலகிருஷ்ணன்.

முதல் வகுப்பு பயணிகள் தான் சாகும் ஹமீதுவின் டார்கெட்டாக இருந்துள்ளது. சக பயணிகளிடம் இனிக்க இனிக்க பேசும் சாகுல் ஹமீது, அனைவரும் தூங்கிய பின்னர் தனது சுய ரூபத்தை காட்டத் தொடங்கி விடுவார் என்கிறார்கள். முதல் வகுப்பு பெட்டிகளில் கொள்ளை தொடர்பாக, ரயில் பயணிகள் தொடர்ந்து புகார் அளித்து வந்த நிலையில், தனி வியூகம் வகுத்து சாகுல் ஹமீதை கைது செய்துள்ளனர் ரயில்வே போலீசார்.

 சேரன், ப்ளூ மவுண்டைன், கொச்சுவேலி ஆகிய ரயில்களில் தான் சாகுல் ஹமீது அதிகமாக கைவரிசை காட்டியுள்ளார். கொள்ளையடித்த பணத்தை சாகுல் ஹமீது வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவலை கூறினார் டிஐஜி பாலகிருஷ்ணன். நெதர்லாந்து நாட்டில் எம். பி. ஏ (MBA) ஓட்டல் நிர்வாகம் முதுநிலை பட்டப்படிப்பை முடித்த சாகுல் ஹமீது, தனது இரண்டாவது மனைவி சஹானாவுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், நைசிவேலி எனும் ஹோட்டல் நடத்தி வருகிறார். தான் கொள்ளையடித்த பணத்தில் தான், மலேசியாவில் சாகுல் ஹமீது ஹோட்டலை நடத்தி வருவதாக போலீசார் கூறுகிறார்கள்.

பொதுவாக முதல் வகுப்பில் பயணம் செய்யும் நபர் திருடமாட்டார் என்கிற பொதுவான எண்ணத்தை, அவர் நன்றாக பயன்படுத்தியுள்ளார். அப்படி கடந்த 4 ஆண்டுகளில், அவர் 29 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவரிடமிருந்து, 110 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

இவ்வழக்கில் சாகுல் ஹமீதின் மனைவி சஹானா உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடிவருகின்றனர். நாகரீகமானவர் போல இருப்பவர்களும், சமூகத்தில் உயர்ந்த மனிதர்களைப்போல காட்டிக் கொள்பவர்களும், மெத்தபடித்த, பழகுவதற்கு இனிமையானவர்களாக இருப்பவர்களும், தவறான செயல்களிலும் ஈடுபடுவார்கள் என்பதற்கு சாகுல் ஹமீது ஓர் உதாரணம்.

Exit mobile version