வீட்டில் திருட செல்லும் போது கீழே விழுந்து திருடன் உயிரிழப்பு

திருடுவதற்காக வீட்டு மொட்டை மாடியில் இருந்து, மற்றொரு வீட்டின் மொட்டை மாடிக்கு தாவிக்குதித்த திருடன் தலையில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சித்தர்காடு, பனந்தோப்பு தெருவை சேர்ந்தவன் ஸ்டான்டு மணி என்கிற மணிகண்டன். இவன் மீது பல திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், காமராஜர் தெருவில் உள்ள ராஜலெட்சுமி என்பவரது வீட்டின் அருகில் உள்ள மொட்டை மாடியில் குதிப்பதற்காக அருகில் உள்ள வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தாவி குதித்துள்ளான். 15அடி உயரத்தில் இருந்து குதித்தபோது, நிலை தடுமாறி தரையில் விழுந்தான். இதில் தலையில் அடிபட்டு திருடன் சம்பவ இடத்திலேயே பலியானான். சப்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது, திருடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில், மயிலாடுதுறை டி.எஸ்.பி வெள்ளதுரை நேரில் விசாரணை மேற்கொண்டார். சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version