தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தொடர் மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக, பல்வேறு இடங்களில் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.

டவ் தே புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. கனமழையினால் பேச்சிபாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 48 அடி உயரம் கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் தற்போது 43 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையிலிருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 245 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கரை புரண்டு ஓடும் வெள்ளம் காரணமாக, தாமிரபரணி மற்றும் பழையாறு கரையோரங்களில் அமைந்துள்ள கிராமங்களில், சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நெல் மற்றும் வாழை பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. தாமிரபரணி ஆறு கடலுடன் கலக்கும் பகுதியான வைக்கல்லூர் பகுதியில், பல ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்ட நெல் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன.

திக்குறிச்சி, முன்சிறை, வைக்கல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில், மேலும் மழை நீடித்து வருவதால், பொதுமக்களும், விவசாயிகளும் அச்சமடைந்துள்ளனர். தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் களியல், குழித்துறை, மாங்காடு, வைக்கல்லூர் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version