மம்சாபுரம் மாணவி இன்று லண்டன் கம்பெனியின் CEO – சாதித்த தமிழக பெண்

 
 
வாழ்க்கையின் ஓட்டத்தில் எத்தனையோ மேடு பள்ளங்களை நாம் அனைவரும் கடந்து தான் வந்திருப்போம். நாம் சந்திக்கும் சவால்கள் தான் நம் வாழ்க்கையின் முடிவுகளை தீர்மானிக்கிறது. சவால்களை சந்திக்கும் அனைவருக்குமே அதன் முடிவுகளை ஏற்றுக் கொள்ளும் துணிவு இருப்பதில்லை. அப்படி ஏற்றுக் கொள்கிறவர்கள் அடுத்த கட்ட முன்னேற்றத்தை நோக்கி நகர்கிறார்கள்.  அப்படி பல்வேறு சோதனைகளை, சவால்களை சந்தித்தவர் தான் நிர்மலா. 
 
ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் நிர்மலா. 12 ஆம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்த இவர் சென்னையில் கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பு முடித்திருக்கிறார். சாதாரண குடும்பத்தை சேர்ந்த நிர்மலாவுக்கு ஆங்கிலம் தெரிந்தாலும் அதை பேசவோ பயன்படுத்தவோ முடியாத ஒரு கிராம சூழல் வாய்த்திருந்தது.  சிறுவயதில் இருந்தே இவருக்கு படிப்பு தவிர்த்து, இசை,பாடல், நடனம் என்று பல்வேறு கலைகளில் விருப்பம் இருந்தாலும், பெண்கள் மீது சமூகம் திணித்து வைத்துள்ள கட்டுப்பாடுகள் இவருடைய குடும்பத்தையும் விட்டுவைக்கவில்லை. தன் பெண் குனிந்த தலை நிமிராமல் பள்ளி சென்று வர வேண்டும் என்றே விரும்பினார்கள் இவருடைய பெற்றோர். ஆனால் நிர்மலாவிற்குள் சாதிக்க வேண்டும் என்ற சுடர் அணையாமல் எரிந்து கொண்டே இருந்தது. தன்னை நிரூபிப்பதற்காக தக்க சமயத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்.தொடர்ந்து தன்னை ஏதாவது ஒரு கலையில் ஈடுபடுத்திக் கொண்டே இருந்தார். புது புது விஷயங்கள் கற்றுக் கொள்வது நம்மை இன்னும் மேம்படுத்தும் என்பதில் தீராத நம்பிக்கை கொண்டவராக இருந்தது தான் இதற்கு காரணம்.. இளங்கலை முடித்ததும் தனக்கு திருமணம் செய்துவிட்டால் படிக்க முடியாது என்று எண்ண முதுகலை படிப்புக்கு விண்ணப்பித்து, அந்த படிப்பையும் வெற்றிகரமாக முடித்தார். பிறகு வாழ்வின் அடுத்த கட்டமாக திருமணம். இங்கு தான் அவருக்கு இன்னும் பல சவால்கள். இவருடைய காதல் மணம். நிர்மலா கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் தான் விரும்பியவர் இந்து மதம் என்பதால், வீட்டில் இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு. ஆனாலும் தன் காதலில் விடா முயற்சியுடன் இருந்ததால், மனம் இறங்கி வந்த வீட்டர் இருவருக்கும் மணம் முடிக்க, வெற்றிகரமான திருமண வாழ்க்கை அமைதியான நதி போல் ஓடி கொண்டிருந்தது.
 
ஆனால் என்றைக்குமே திருப்பங்கள் நிறைந்தது தானே வாழ்க்கை. இருவரின் அன்பின் உரவாக 4 வருடங்களுக்கு பிறகு குழந்தை பிறந்தது. குடும்பமே குழந்தையைன் வரவால் குதூகலமாக இருக்க, பிறந்த 5 நாட்களில் அவரின் குழந்தை இறந்துவிட்டது என்ற செய்தி வாழ்வின் மிகப்பெரிய இடியாக இறங்கியது.இனி அடுத்து என்ன செய்வது என்ற கேள்வி மனதின் உள்ளே சுழன்றுஅடிக்க  நாட்கள் அப்படியே நகர்ந்து கொண்டிருந்தது. காயம் ஆறிவிடும்.. ஆனால் காயத்தின் வடுக்கள் அப்படியே தாயே இருக்கும். கடின மனதுடன் தமிழகத்தில் இருந்து லண்டன் சென்ற நிர்மலா, ரெய்கி வகுப்புகளில் சேர்ந்து ரெய்கி கற்றிருக்கிறார். பின்னர் நிறைய புத்தங்கள் வாசிக்கும் பழக்கத்தை தொடங்க, வாசிப்பு அவருடைய நேசிப்பாகி போனது. அப்போது தான் இணையதள பயன்பாடு அதிகம் தொடங்கி இருந்த காலம். புத்தக வாசிப்பு ஒரு புறம், இணைய தன வாசிப்பு ஒரு புறம் என் நாட்கள் நகர நகர மனதும் விசாலமாகிக்கொண்டே வந்தது.
image
 
தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து லண்டன் நோக்கிய அடுத்த பயணம். அடுத்ததாக ஆன்மீகத்தில் ஈடுபாடு வர அது தொடர்பாகவும் பல புத்தங்களை படித்து தெளிந்திருக்கிறார் நிர்மலா.. முதலில் மெக்கானிக்கல் துறை, அடுத்து சாப்ட்வேர், நிலாச்சாரல் இணையதளம் என்று அவருடைய பயணம் வேகமெடுத்தது. 11 புத்தகங்களை எழுதியிருக்கும் நிர்மலா, 300 க்கும மேற்பட்ட புத்தகங்களை அயல்நாட்டு நூலகங்களுக்கு டிஜிட்டலைஸ் செய்து கொடுத்திருக்கிறார். நிலாச்சாரல் இணையதளம் மூலம் பல கட்டுரைகளை எழுதியிருக்கும் இவர் 30,000 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை ப்ரூப் திருத்தி இருக்கிறார். மேலும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வகுப்புகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
 
இன்று அமெரிக்காவில் ஒரு சாப்ட்வேர் அலுவலகத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார். தன் பள்ளிக் காலத்தில் ஆங்கிலம் பேச தடுமாறியவர், இன்று பல மாணவர்களுக்கு ரோல் மாடல். இவருடைய அலுவலகத்தில் உள்ளவர்கள் 4 வெவ்வேறு நாடுகள் 4 மதங்களை சேர்ந்தவர்கள், 10 மொழிகளை பேசுகிறார்கள். அத்தனைபேரையும் மிக அழகாக நிர்வகிக்கிறார் நிர்மலா.
 
இன்றைய இளையதலைமுறைக்கு இவர் சொல்வதெல்லாம் ஒன்று தான். உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள். பிடித்த விஷயத்திற்காக தொடர்ந்து உழையுங்கள். வெற்றி உங்கள் காலடியில். ஆம் உண்மை தானே.
 
 
 
 
Exit mobile version