முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயரிய திட்டங்களில் ஒன்றாகப் போற்றப்படும் தொட்டில் குழந்தை திட்டம்

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் எத்தனையோ மக்கள்நலத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டு இருந்தாலும், அதற்கெல்லாம் சிகரமாய் விளங்குவது, அவர் அறிமுகப்படுத்தியதுதான் தொட்டில் குழந்தை திட்டம். அந்த சிறப்பு மிக்க திட்டத்தால் தான் தர்மபுரி பெண் சிசு கொலை இல்லாத மாவட்டமாக உருவெடுத்தது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பை இப்போது பார்ப்போம்..

இப்படி குடும்ப வறுமை காரணமாக பெற்றோர்களே பிறந்த பெண் குழந்தைகளை குப்பைத் தொட்டிகளில் வீசிச் செல்வது, கள்ளிப்பால் கொடுத்து கொல்வது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் ஒருகாலத்தில் அரங்கேறின. குறிப்பாக 1990-ம் ஆண்டு சேலம், மதுரை, தேனி,திண்டுக்கல், தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பிறந்த பெண் குழந்தைகளை கொல்லும் வழக்கம் அதிகமாகக் காணப்பட்டது. இப்படி இருந்த நிலையில் சமுதாயம் உருவாக அடித்தளமாகவும், ஆணி வேராகவும் இருக்கும் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதிலிருந்து காப்பாற்ற தமிழக முதலமைச்சரால் கொண்டுவரப்பட்ட ஒரு உன்னத திட்டம் தான் தொட்டில் குழந்தை திட்டம்….

இத்திட்டம் முதன்முதலில் சேலத்தில் அறிமுகப்பட்டுத்தப்பட்டு பின் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. பின்னாளில் அரசு மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் போன்ற இடங்களிலும் தொட்டில்கள் வைக்கப்பட்டன. தொட்டில்களில் இடப்படும் குழந்தைகள் தமிழக அரசால் பாதுகாக்கப்பட்டு காப்பகத்தில் பத்திரமாக ஒப்படைக்கப்படுகிறது.

2001-ம் ஆண்டு இத்திட்டம் தர்மபுரி மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2018-ம் ஆண்டு வரை 82 ஆண் குழந்தைகளும், ஆயிரத்து 381 பெண் குழந்தைகளும் தொட்டில் குழந்தை வரவேற்பு மையத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எதிர்காலமே கேள்விக்குறியாக வேண்டிய இக்குழந்தைகள் தற்போது சமூகத்தில் தாங்களும் ஒரு அங்கம் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டதே இத்திட்டத்தின் ஆகச்சிறந்த பங்களிப்பு என்று கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தொட்டில் குழந்தை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டப் பிறகு தர்மபுரி மாவட்டத்தில் பெண் சிசு கொலை என்பது முற்றிலும் இல்லாத நிலை உருவாகி உள்ளதாக சைல்டு லைன் இயக்குநர் தாமஸ் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தினால் எண்ணற்ற குழந்தைகள் பயன்பெற்றுள்ளதால் இதனை மேலும் விரிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயரிய திட்டங்களில் ஒன்றாகப் போற்றப்படும் தொட்டில் குழந்தை திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்வில் ஒளி ஏற்றப்பட்டுள்ளது. அதனால் தான் அவர் அம்மா.

 

Exit mobile version