மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக மக்களுக்கு செய்த நலத்திட்டப் பணிகள் என்றும் நினைவில் வைத்து போற்றக்கூடியவை என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். தீவிரவாதத்திற்கு எதிராக மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று உரையாற்றிய அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக மக்களுக்கு செய்த நலத்திட்டப் பணிகள் என்றும் நினைவில் வைத்து போற்றக்கூடியவை என்றும் அதனை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருவாதக பாராட்டு தெரிவித்தார்.
கன்னியாகுமரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். வரவேற்புரை நிகழ்த்திய மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடிக்கு தமிழகம் எப்போதும் துணை நிற்கும் என்று குறிப்பிட்டார். கன்னியாகுமரிக்கு பல்வேறு திட்டங்களை பிரதமர் ஒதுக்கி இருப்பதை சுட்டிக் காட்டி நன்றி தெரிவித்தார்.
விவசாயிகளுக்கான கவுரவ நிதி திட்டத்தில் 1.1 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் முதல் தவணையாக 6000 ரூபாய் நிதி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்த மோடி ஒரே மாதத்தில் திட்டம் அறிவிக்கப்பட்டு அதே மாதத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்காக 24 நாட்களுக்குள் மக்களுக்கு இத்திட்டம் சென்று சேர 24 மணி நேரமும் உழைத்திருப்பதாக அவர் கூறினார்.
இதையடுத்து, 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவடைந்த பணிகளையும் பிரதமர் திறந்து வைத்தார். முக்கியமாக, பாம்பனில் 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம், ராமேஸ்வரம் – தனுஷ்கோடி இடையே 208 கோடி ரூபாயில் புதிய ரயில் திட்டம், மதுரை – சென்னை எழும்பூர் இடையிலான தேஜஸ் ரயில் சேவை, செட்டிகுளம்- நத்தம் மற்றும் பணகுடி- கன்னியாகுமரி இடையே 4வழிச் சாலைத்திட்டம், குமரியில் சாலைப் பாதுகாப்புப் பூங்கா மற்றும் போக்குவரத்து அருங்காட்சியகம் உள்ளிட்டவற்றை பல திட்டங்களை பிரதமர் துவக்கி வைத்தார்
புல்வாமா தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த இந்திய ராணுவத்திற்கு வணக்கங்களை தெரிவித்துக்கொள்வதாக கூறிய மோடி நம் இராணுவத்தினரின் விழிப்புணர்வுதான் நம்மை பாதுகாப்பாக வைத்துள்ளது என புகழாரம் சூட்டினார்.
வாழ்த்துரை வழங்கிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் எண்ணற்ற ஏழை எளிய மக்கள் பயன் பெற்று வருவதாக தெரிவித்தார். தீவிரவாதிகளை ஒடுக்க ராணுவ நடவடிக்கையை துணிச்சலுடன் மேற்கொண்ட பிரதமருக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.