சபரிமலை தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, சபரிமலையில் தற்போது வரை பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி, அகில இந்திய அய்யப்ப சேவா சங்கம், நாயர் சேவா சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மனு தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில், நீதிபதிகள் நாரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று விசாரணை நடத்துகிறது.