உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான திமுகவின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான உத்தரவுக்கு விளக்கம் கோரிய திமுகவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

தமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படவில்லை எனக் கூறி அறிவிப்பை ரத்து செய்யக் கோரி திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. இதை விசாரித்த நீதிபதிகள், தேர்தலுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டனர். அதேநேரத்தில் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தேர்தல் நடத்த உத்தரவிட்டனர். பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறையை 3 மாதங்களில் முடித்துத் தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டனர். இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான உத்தரவில் சில சந்தேகங்கள் இருப்பதாகக் கூறி விளக்கம் கோரி திமுக சார்பில் முறையிடப்பட்டது. தமிழக அரசு சார்பில் ஆஜரான முகுல் ரோகத்கி, தேர்தலை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே திமுக தடைகள் ஏற்படுத்துவதாகவும், இதனால் தேர்தலை நிறுத்தக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து திமுகவின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். இதனால் திட்டமிட்டபடி டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் எனத் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தெரிவித்துள்ளார்.

Exit mobile version