பட்டாசு உற்பத்திக்கு விதிக்கப்பட்டிருக்கும் கடும் கட்டுப்பாடுகளை தளர்த்த கோரும் வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
பட்டாசு வெடிப்பதால் சுற்றுச் சூழல் மாசடைவதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பானது கடந்த அக்டோபர் மாதம் வழங்கப்பட்டது. அதன்படி பட்டாசு தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருளான வெளிச்சம் தரக்கூடிய பேரியம் நைட்ரேட் இல்லாத, பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இதனால் பட்டாசு உற்பத்தி செய்ய முடியாத சூழ்நிலை நிலவுவதாகக் கூறி, சிவகாசியை மையமாக கொண்டு இயங்கிவந்த ஆயிரத்து 70-க்கும் மேலான பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன. இந்நிலையில் பட்டாசு உற்பத்திக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்த கோரும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதில் நல்ல தீர்ப்பு வெளியாகும் என பட்டாசு தொழிலாளர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.