கடலோர பகுதிகளில் மக்கள் கடலில் மூழ்கி பலியாவதை தடுக்கும் வகையில் திட்டம் ஒன்றை வகுக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நீர் நிலைகளில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தரப்பில் 22 மாவட்டங்களின் ஆட்சியர்கள் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீரில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், பலியானவர்களின் விவரங்கள் குறித்த விவரங்களும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம், திருச்செந்தூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய கடலோர பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு வரும் பக்தர்கள் கடலில் மூழ்கி உயிர் இழப்பதை தடுக்க, தமிழக அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் இணைந்து கூட்டாக திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர். மேலும், மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில் அறிக்கை தாக்கல் செய்த 22 மாவட்டங்களை தவிர்த்து, மீதமுள்ள 15 மாவட்ட ஆட்சியர்களும் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.