சுனாமி ஆழிப்பேரலை தாக்கியதன் 15வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பம் ஆகிய பகுதி மக்கள், கடல் அலையில் மலர் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ந் தேதி, இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக, தமிழகத்தில் சென்னை, நாகை, வேளாங்கண்ணி, கடலூர், கன்னியாகுமரி உட்பட கடலோரப் பகுதிகளை சுனாமி ஆழிப்பேரலை தாக்கியதில், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் நினைவாக, அனைத்து பகுதிகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. சென்னை நொச்சிக்குப்பம் கடற்கரை பகுதியில் உள்ள மீனவர்கள், சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். மயிலாப்பூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ் தலைமையில், நொச்சிக்குப்பம், சீனிவாசபுரம், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட மீனவ கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர், இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பொதுமக்கள் ஊர்வலமாக சென்று பட்டினப்பாக்கம் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மேலும், கடல் அலையில் மலர் தூவியும், பால் ஊற்றியும் அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.