சுனாமி தாக்கியதன் 15ம் ஆண்டு நினைவு நாள் -செய்தி தொகுப்பு

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் 2004 டிசம்பர் 26-ஆம் தேதி இதே நாளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை சுனாமி என்ற ஆழிப் பேரலை  தாக்கியது. சுனாமியின் நினைவலைகளை நினைவு கூர்வோம் இந்தத் தொகுப்பில்..

இந்தோனேசியாவில், சுமத்ரா தீவு அருகே 2004 டிசம்பர் 26 அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், பூமிக்கு கீழே இருந்த நிலத்தட்டுகள் சரிந்தன. சுமார்  10 நிமிடங்கள் வரை நீடித்த இதுபோன்ற நிலநடுக்கம் இதற்கு முன்னர் எங்குமே பதிவானதில்லை. உலகில் 2-ஆவது பெரிய அளவாக, ரிக்டர் அளவுகோலில் 9.1 முதல் 9.3 வரை இந்த நிலநடுக்கம் பதிவானது. இது கடலுக்கடியில் சுனாமியினை உருவாக்கியது.

 இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பல லட்சம் மக்களை இந்த ஆழிப் பேரலை பலி கொண்டது. தமிழகத்தில் சென்னை, கடலூர், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளை சூறையாடியது.பல்லாயிரக்கணக்கானோர் உயிரினையும், உடைமைகளையும் இழந்தனர். தாய், தந்தையரை இழந்து நூற்றுக்கணக்கான குழந்தைகள் அனாதையாயினர். பல்வேறு நிவாரணப் பணிகளை அரசும், சர்வதேசத் தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டாலும், இன்றும் பாதிக்கப்பட்ட மக்கள் மனதில் சுனாமியின் சோகம் நிழலாடுகிறது.

கடலூர் மாவட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் வீடுகளை இழந்தனர். வீடுகளை இழந்தவர்களுக்கு தமிழக அரசு வீடு கட்டி தந்தது. இதற்காக இன்றும் மீனவ மக்கள் தமிழக அரசுக்கும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் தங்களது நன்றியினை தெரிவிக்கின்றனர்.

அதேபோல் நாகை மாவட்டத்திலும் சுனாமியின் பாதிப்பு அதிகமாக உணரபட்டது. சுனாமியின் பாதிப்பு வந்து ஆண்டுகள் 15 ஆனாலும் அதன் வடு இன்னும் மாறவில்லை என்கின்றனர் இப்பகுதி மீனவர்கள்

இந்தப் பெரும் துயரச் சம்பவத்துக்குப் பிறகு, இந்தியப் பெருங்கடலை ஒட்டியுள்ள நாடுகள் இப்போது சுனாமி எச்சரிக்கைக் கருவிகளை நிறுவியுள்ளன. இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டாலோ அல்லது ஆழிப் பேரலைகள் வந்தாலோ உடனடியாக எச்சரிக்கை விடுக்கும் வசதி இப்போது உருவாக்கப்பட்டுள்ளது.

Exit mobile version