உலக நாடுகள், தலைநகரங்களின் பெயர்களை 5.19 நிமிடங்களில் ஒப்புவித்த மாணவன்

ஜெயங்கொண்டம் அருகே யுகேஜி படிக்கும் மாணவன் உலக வரைபடத்தை பார்த்து அதில் உள்ள நாடுகள் மற்றும் அதன் தலைநகரங்களின் பெயரை 5.19 நிமிடங்களில் ஒப்புவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுவாமிநாதன். இவரது மகன் சாய் கிருத்திக் ஜெயன்கொண்டம் அருகே உள்ள தனியார் சி.பி.எஸ்.இ பள்ளியில் யூகேஜி படித்து வருகிறான். சிறுவயதிலிருந்தே சாய் கிருத்திக்கிற்கு உலக நாடுகள் பற்றி தெரிந்து கொள்வதில் தீவிர ஆர்வம் இருந்து வந்துள்ளது.

இதனை சரியாக பயன்படுத்திய சிறுவனின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவனுக்கு தினந்தோறும் உலக வரைபடத்தில் உள்ள நாடுகளின் பெயர்களை சொல்லிக் கொடுத்து பயிற்சியளித்துள்ளனர்.

இதனால், சிறுவன் சாய் கிருத்திக் உலக வரைபடத்தை பார்த்த படியே, அதில் உள்ள நாடுகளின் பெயரையும், அதன் தலை நகரங்களையும் எந்த வரிசையில் கேட்டாலும், ஒப்புவிக்கும் திறமையை வளர்த்துக் கொண்டான். இந்நிலையில், பெற்றோர்களும் பள்ளி நிர்வாகமும் சாய் கிருத்திக்கின் திறமையை, சாதனையாக்கும் நோக்கத்தில், குளோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற குழுவில் இருந்து தேர்வு குழுவினரை வரவழைத்திருந்தனர்.

அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற சோதனை முயற்சியில் சிறுவன் சாய் கிருத்திக் ஒப்புவிக்க தயாரானான் .சிறுவனுக்காக, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உலகநாடுகளின் வரைபடங்கள் வைக்கப்பட்டு, தேர்வு குழுவினர் அவனுக்கு உலக நாடுகளின் பெயரை ஒப்பிக்க பத்து நிமிடங்கள் நேரம் விதித்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து, இந்திய நாட்டில் தொடங்கி, பின்னர் ஒவ்வொரு நாட்டின் பெயர் மற்றும் அதன் தலைநகரங்களின் பெயர்களையும் மூச்சுவிடாமல் கூறத் தொடங்கிய சிறுவன் சாய் கிருத்திக் 5.19 நிமிடங்களில் அனைத்து நாடுகளின் பெயர்களையும் ஒப்புவித்து சாதனை படைத்தான்.சிறுவனின் சாதனையை பாராட்டும் விதமாக, பள்ளி தாளாளர் மற்றும் தேர்வுக் குழுவினர் அவனுக்கு, சான்றிதழ் வழங்கி ஊக்குவித்தனர்.

இதன் மூலம், சிறுவன் சாய் கிருத்திக், தேசிய அளவில் ஏசியா பசிபிக் மற்றும் குளோபல் ரெக்கார்ட்ஸ் ல் சாதனைப் படைத்த குழந்தை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மேலும், சிறுவன் சாய் கிருத்திக், கின்னஸ் சாதனை படைப்பதற்கான ஏற்பாடுகளையும், பள்ளி நிர்வாகம் செய்துவருகிறது.

Exit mobile version