உ.பியில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறக்கோரிப் போராட்டம்

குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோவில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் காவல்துறையினர் தடியடி நடத்திப் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெறக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோவில் ஹஸ்ரத்கஞ்ச் என்னுமிடத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்கியதால் வன்முறை மூண்டது.

பதிலுக்குக் காவல்துறையினர் தடியடி நடத்திப் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். கல்வீச்சு மற்றும் தாக்குதலில் காவல்துறையினர், பொதுமக்கள், செய்தியாளர்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வன்முறையின்போது செய்தித் தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பு வாகனம் ஒன்றும் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. வன்முறையால் அப்பகுதியே போர்க்களம்போல் காட்சியளித்தது.

மேலும் லக்னோவில் நடைபெற்ற வன்முறையின்போது போராட்டக்காரர்கள் காவல்துறையினரின் வாகனத்தைப் புரட்டிப் போட்டு விட்டுத் தப்பிச் சென்றுவிட்டனர். போராட்டக்காரர்களை விரட்டிவிட்டபின் காவல்துறையினர் அந்த வாகனத்தை மீண்டும் தூக்கி நேராக நிறுத்தினர்.

Exit mobile version