ஒருபுறம் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது கஜா புயல்… இந்தநிலையில் கடந்த 40 ஆண்டுகளில் வடக்கிழக்கு பருவமழை காலத்தில் உருவான சில புயல்களின் தன்மை மற்றும் அவை ஏற்படுத்திய சேதங்கள் குறித்து தற்போது சுருக்கமாக காண்போம்.
1978-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி வங்க கடலில் உருவான 04B என்ற புயல் அதே மாதம் 29-ம் தேதி இலங்கையின் கிழக்கு மாகாணத்தை மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து சூறையாடியது.
1984-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி ஸ்ரீஹரிக்கோட்டாவை தாக்கிய Cyclone Three(3B) புயலில் சிக்கி 430 பேர் உயிரிழந்தனர்… அப்போது அந்த புயலின் வேகம் மணிக்கு 155 கிலோ மீட்டர் என கணக்கிடப்பட்டது..
அதே ஆண்டு நவம்பர் 30-ல் புயலாக உருவெடுத்த Cyclone Four (4B)… மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் கடலூரை கடந்து அரபிக்கடலில் சங்கமித்ததுடன் அப்படியே சென்று சோமாலியாவை தாக்கியது.
1993-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி காரைக்கால் அருகே மணிக்கு 198 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்த BOB 02 என்ற புயலால் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 600 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின… 70 பேர் உயிரிழந்தனர்… புதுச்சேரியில் மட்டும் 20 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தது.
சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே 1996-ம் ஆண்டு டிசம்பர் 6-ல் கரையை கடந்தது BOB 06 (08B)… அப்போது சென்னையில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசியது.
2000-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி கடலூர் அருகே கரையை கடந்தது BOB 05 புயல்… இதனால் மணிக்கு 190 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றில் சிக்கி தென்னை உள்ளிட்ட 30 ஆயிரம் மரங்கள் வேறோடு சாய்ந்தன.
அதி தீவிர புயலான தானே, 2011-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி புதுச்சேரிக்கும் கடலூருக்கும் இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 125 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசிய நிலையில், 46 பேர் பலியாகினர்.
2016-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி சென்னை அருகே கரையை கடந்த வர்தா புயல் மாநகரையே நிலைக்குலைய செய்தது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு லட்சம் மரங்கள் சாய்ந்தன… அதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 155 கிலோ மீட்டராக கணக்கிடப்பட்டிருந்தது.