கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கடந்த ஐந்து நாட்களாக நிறுத்தப்பட்டுள்ள கோதண்டராமர் சிலை கடந்து செல்ல தற்காலிக சாலை போடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கோரமங்களாவை அடுத்த ஈஜிபுரத்தில் 108 அடி உயரத்தில் கோதண்டராமர் சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்கென தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் முகம் மற்றும் இரண்டு கைகள் வடிவமைக்கப்பட்டு கடந்த நவம்பர் 7ம் தேதி லாரியில் கொண்டு செல்லப்பட்டது.
கடந்த 1ம் தேதி கிருஷ்ணகிரி டோல்கேட்டை கடந்து சென்ற சிலை, குருபரப்பள்ளி அருகே மார்க்கண்டேய நதி குறுக்கிட்டதால் கடந்த ஒருவார காலமாக அங்கேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 500 அடி நீள ஆற்றில் தற்காலிக சாலை அமைக்கப்பட்டு, அதன்மூலம் சூளகிரி அருகே சாமல்பள்ளத்தை சிலை வந்தடைந்தது.
இதேபோல சாமல் பள்ளம் மற்றும் சின்னாறு பகுதிகளிலும் தற்காலிக சாலைகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சாமல் பள்ளத்தில் உள்ள சிலையை அப்பகுதி மக்கள் அதிகளவில் பார்வையிட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் திடீர் கடைகள் முளைத்துள்ளன.