ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை நீக்கியதை எதிர்த்து வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, காஷ்மீர் டைம்ஸ் நாளிதழ் ஆசிரியர் அனுராதா பசீன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில் காஷ்மீரில் செல்பேசி இணையத் தொடர்பு, தரைவழித் தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், செய்தியாளர்கள் பணியைச் செய்வதற்கு வசதியாக தொலைபேசி, இணையத்தளத் தொடர்பு வசதிகளை மீண்டும் வழங்க வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தனர்.
ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் 370ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்யும் உத்தரவில் குடியரசுத் தலைவர் கையொப்பமிட்டது சட்டப்படி செல்லாது எனக் கோரியிருந்தனர்.
இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் பாப்தே, நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தன.
அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், வழக்கறிஞர் எம்எல் சர்மாவைப் பார்த்து, மனுவை ஒன்றரை மணி நேரம் படித்துப் பார்த்துவிட்டதாகவும், மனுவில் உள்ள கோரிக்கை என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்தார்.
அரசு வழக்கறிஞர் துசார் மேத்தா, காஷ்மீரில் நிலவும் களநிலவரம் குறித்துப் பாதுகாப்புப் படையினர் ஆய்வு செய்து வருவதாகவும், அடுத்த சில நாட்களில் நிலைமை சீராகும் எனவும் தெரிவித்தார். அதற்கு முன் மனுதாரர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதையடுத்துப் பேசிய நீதிபதிகள், காஷ்மீரில் தரைவழித் தொலைபேசித் தொடர்புகள் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்.
மற்ற கட்டுப்பாடுகளை நீக்க உத்தரவிட மறுத்ததுடன், அரசுக்குப் போதிய அவகாசம் வழங்கப்பட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.