மேட்டுப்பாளையம் உதகை இடையே சிறப்பு மலை ரயில் போக்குவரத்து, அக்டோபர் 5ஆம் தேதி முதல் துவக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி மலை ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. முன்பதிவு செய்து பயணிக்கும் வகையில் உள்ள இந்த மலை ரயில் போக்குவரத்தானது 4பெட்டிகள் மட்டுமே கொண்டதாக இருப்பதால், இதில் 150பயணிகளுக்கு மேல் செல்ல முடியாது. தினசரி ஒரு ரயில் போக்குவரத்து மட்டுமே உள்ளதால் இதில் பயணிக்க முன்பதிவு செய்து பல மாதங்கள் சுற்றுலா பயணிகள் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று 2வது மலர் கண்காட்சி சீசனுக்காக அக்டோபர் 5ஆம் தேதி முதல் கூடுதலாக ஒரு மலை ரயில் சேவையை துவக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தினசரி இயக்கப்படும் மலை ரயில் காலை 7.15 மணிக்கும், சிறப்பு மலை ரயில் காலை 9.10க்கு புறப்பட்டு உதகை செல்லும் வகையில் திட்டமிடபட்டுள்ளது. விடுமுறை தினங்களான சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களுக்கு, இந்த மலை ரயில் சிறப்பு கட்டணத்தில் இயக்கப்படும். இதற்கான முன்பதிவும் காலையில் தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.