இன்று தென்மேற்கு பருவமழை தீவிரமடையக்கூடும் என்பதால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கடந்த சனிக்கிழமை கேரளாவில் துவங்கியது. இது இன்று தீவிரமாகும் என கணித்திருக்கும் வானிலை ஆய்வாளர்கள், இதன் காரணமாக நீலகிரி, கோவை, தேனியில் கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுதவிர வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேசமயம் சில இடங்களில் இடிமின்னலுடன் பலத்த காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை, வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றையதினம் அதிகபட்சமாக சென்னையில் 109 டிகிரியும், திருத்தணியில் 108 டிகிரியும் வெப்பம் பதிவானது குறிப்பிடத்தக்கது.