காமன்வெல்த் போட்டிகள் மற்றும் உலக வலுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வெல்வதே தம்முடைய மகனின் இலக்கு என்று ஹாங்காங் ஆசிய சாம்பியன்ஷிப் வலுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற நவீனின் தந்தை தெரிவித்துள்ளார்.
ஹாங்காங் வலு தூக்கும் கூட்டமைப்பு மற்றும் ஆசிய வலு தூக்கும் கூட்டமைப்பு சார்பில் ஆசிய அளவில் நடைபெற்ற சப் ஜூனியர் பிரிவு வலுதூக்கும் போட்டியில் சென்னை அயனாவரத்தை சேர்ந்த 17 வயதான நவீன் வலுதூக்கும் போட்டியில் 3 தங்கம், ஒரு வெண்கலம் உட்பட நான்கு பதக்கங்களை வென்றுள்ளார். இந்த நிலையில், நவீனின் தந்தை சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். இந்திய அளவில் பங்கெடுத்து தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற பல நாள் கண்ட கனவு இன்று நனவாகி இருப்பதாக தெரிவித்தார். மேலும் பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டு, வரும் காமன்வெல்த் போட்டி மற்றும் உலக அளவிலான வலுதூக்கும் போட்டியில் தங்கம் வெல்வதே தன் மகனின் லட்சியம் என்றும் தெரிவித்தார்.