கீழடியில் 6 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் நாளை தொடங்கி வைக்கிறார்.
கீழடியில் பழங்கால தொல்பொருள்கள் அதிகளவில் கிடைத்ததை அடுத்து அந்த பகுதியில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதையடுத்து, மத்திய அரசின் 20 கோடி நிதியுதவியுடன் கடந்த 2015ல் கீழடி பள்ளிச் சந்தை திடலில் முதல் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின. முதல் 3 கட்ட அகழாய்வுப் பணிகளை இந்திய தொல்பொருள் அகழாய்வுத் துறை மேற்கொண்டது. அதைத்தொடர்ந்து, 4 மற்றும் 5 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது.
இந்நிலையில், 4ஆம் கட்ட அகழாய்வில் கிடைத்த தொல்பொருள்களின் ஆய்வு முடிவுகளை தமிழக தொல்லியல் துறை வெளியிட்டது. இதையடுத்து, கீழடியில் தற்போது அகழாய்வு நடைபெற்றுள்ள பகுதிகள் தவிர மீதமுள்ள பகுதிகள் மற்றும் அருகே உள்ள மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் 6 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில், கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை நாளை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் தொடக்கி வைக்க உள்ளார்.