அமைச்சர் வந்தாதான் திறப்போம்… அடம்பிடிக்கும் அதிகாரிகள் அழுகும் நெல்மூட்டைகள்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே திமுக அமைச்சர் திறந்து வைத்த பிறகே, நெல் கொள்முதல் நிலையம் செயல்படும் என அதிகாரிகள் கூறுவதால், 20 நாட்களுக்கு மேலாக 10 ஆயிரம் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

வயலூரில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்ற அறிவிப்பால் விருத்தாச்சலம் மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை, நேரடி கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த நெல்லை குவியலாக மேம்பாலத்தின் அடியில் கொட்டி வைத்துள்ளனர். இதுகுறித்து முறையிட்டால், திமுக அமைச்சர் வந்து திறந்து வைத்த பின்பு தான், நெல் கொள்முதல் செய்யப்படும் என அதிகாரிகள் கூறுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இதனால் குவியல் குவியலாகக் குவித்து வைத்திருக்கும் நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 20 நாட்களுக்கு மேலாக 10 ஆயிரம் நெல் மூட்டைகளுடன் காத்திருப்பதாக விவசாயிகள் கவலையுடன் கூறினர்.

Exit mobile version