தெருவை சூழ்ந்திருக்கும் கழிவுநீர்! அனைத்து தரப்பு மக்களும் பாதிப்பு! கண்டுகொள்ளாத திமுக கவுன்சிலர்!

சென்னைஆயிரம் விளக்கு தொகுதியில் 118வது வார்டில் உள்ள தெரு ஒன்றில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக கழிவுநீர் தேங்கியிருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது குறித்துச் சொல்கிறது இந்த செய்தித் தொகுப்பு…

மழை ஒன்றும் வானத்தை கிழித்துக் கொண்டு பெய்யவில்லை…. ஆனால் சென்னை ஆயிரம் விளக்குதொகுதி 118வது வார்டுக்கு உட்பட்ட பொன்னுசாமி தெருவில் தண்ணீர் சூழ்ந்து கிடக்கிறது. இது மழைநீர் அல்ல….. கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பால் தேங்கிக் கழிவுநீர். வெளியேற முடியாத கழிவுநீரில் கால் நனைத்துதான் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள் அப்பகுதி பொதுமக்களும் பள்ளிக்கு மற்றும் வேலைக்கு செல்வோரும்.

கோபாலபுரம் பகுதியில் கழிவுநீர் குழாய் அடைக்கப்பட்டிருப்பதால் இந்தப் பகுதியில் கழிவுநீர் தேங்கியிருப்பதாகவும், இங்குள்ள உணவகத்துக்கு வரும் சிறுவர்கள், பெரியவர்கள் கழிவுநீர் வழியாகவே வரவேண்டி இருப்பதால், நோய் தாக்கும் அபாயம் நிலவிக் கொண்டிருப்பதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கழிவு நீர் தேங்கிக் கிடப்பது குறித்து திமுக கவுன்சிலர் மல்லிகா, திமுக நிர்வாகியான அவரது கணவர் யுவராஜ் ஆகியோரிடம் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

ஏற்கனவே கொசுத்தொல்லை அதிகரித்துள்ள இந்தப் பகுதியில் தற்போது கழிவுநீர் தேங்கிக் கிடப்பதால் கொசுத்தொல்லை கூடுதலாகி பல்வேறு நோய்கள் வரக்கூடிய அபாயம் இருப்பதாகவும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கடந்த நான்கு நாட்களாக ஏற்பட்டுள்ள இந்த கழிவுநீர் பிரச்சினையால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். உடனடியாக இப்பகுதியில் உள்ள கழிவுநீர் அடைப்பை சரி செய்ய வேண்டும் என அவர்கள் விடுத்துள்ள கோரிக்கை மாநகராட்சியின் செவிகளுக்கு எட்டுமா?

Exit mobile version