"தமிழ்நாடு அரசு இன்னும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்" – அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடும் நிலையில், தமிழ்நாட்டில் மக்கள் அச்ச உணர்வுடன் வாழும் அவல நிலை, ஏற்பட்டுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு இன்னும் துரித நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்கள் மிகப்பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கை வசதியின்மை, ஆக்சிஜன் தட்டுப்பாடு, ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஆகியவைதான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட முக்கிய காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இவற்றை தடையின்றி கிடைக்க, முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஊரடங்கு முழுமையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை என்றும், இதன்காரணமாக கொரோனா தொற்று அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்தி, தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோயை ஆரம்பத்திலேயே தடுக்கவேண்டும் எனவும், பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக மருந்து கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version